புனித பூமி என்ற போர்வையில் அடக்குமுறை: தமிழர் பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு!
திருகோணமலை (Trincomalee) - குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் உள்ள பொன்மலைக்குடா பகுதியில் உள்ள மையவாடியில் ஜனாசாவை அடக்கம் செய்யமுற்பட்ட போது புனித பூமி என்ற போர்வையில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று(12.10.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த காணி அரிசிமலை பகுதியின் கட்டுப்பாட்டில் உள்ள புனித பூமி என விகாராதிபதி தெரிவித்ததை அடுத்தே சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றுள்ளனர்.
தொல்லியல் திணைக்களத்தினர் முறைப்பாடு
இதன் பின்னர் உரிய தரப்புக்களுடன் அரச உயரதிகாரிகள் உடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது தவிர அண்மையில் திரியாய் கிராம சேவகர் பிரிவில் உள்ள வலத்தாமலை விவசாய பகுதியில் தங்களது விவசாய நிலங்களை இயந்திரம் மூலமாக உழுத போது தொல்லியல் திணைக்களத்தினர் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டனர்.
அதற்கமைய, தொல்பொருட்களை சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அந்த பகுதியிலுள்ள விவசாய நிலம் மக்களுக்கு சொந்தமான போதும் விவசாயம் செய்ய விடாது அப்பகுதி விகாராதிபதி தடுத்து நிறுத்துவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் காணிகள்
அத்துடன், குறித்த விகாராதிபதி புனித பூமி என கூறி அப்பகுதியில் கட்டிடம், விகாரை என அமைத்து வாழ்ந்து வருவதாகவும் 82 ஏக்கர் அளவில் விவசாய நெற்செய்கைக்கான மக்கள் காணிகளை குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தொடர் போராட்டம் ஊடாக மக்கள் தங்களது உரிமைகளுக்காக பாடுபடுகின்ற போதும் நிரந்தர தீர்வு இல்லை என தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவை தளமாகக கொண்டு இயங்கும் காணி தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனமான ஓக்லன்ட் அறிக்கையின் படி, கிழக்கு மாகாணத்தில் அதிகமான நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியாக குச்சவெளி பிரதேச செயலக பிரிவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தற்போது நாடாளுமன்ற தேர்தல் இடம் பெறவுள்ளது வேட்பாளர்கள் சரியான நிரந்தரமான தீர்வினை பெற்றுக்கொடுப்பார்களா என அப்பகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |