TruePass: இலங்கையில் முதன்முறையாக அறிமுகமான புதிய டிஜிட்டல் அடையாளத் தளம்!
இலங்கை டிஜிட்டல் ஊடகத் துறையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில், "TruePass" எனும் இலங்கை தயாரிப்பிலான டிஜிட்டல் அடையாள மற்றும் அங்கீகாரத் தளம் (Digital Identity Platform) கொழும்பில் செப்டம்பர் 17 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
AdStudio.cloud நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இத்தளத்தின் மூலம் வாசகர்கள் ஒரே ஒரு முறை உள்நுழைந்து (Authenticate once, access everywhere) பல முன்னணி ஊடகத் தளங்களை எளிதாகப் பயன்படுத்த முடியும்.
இந்த அறிமுக நிகழ்வின் போது விஜய செய்திப்பத்திரிகை நிறுவனம், ஹிரு நியூஸ், நியூஸ் ஃபர்ஸ்ட், அட தெரண, லிபர்ட்டி மீடியா, வீரகேசரி, பாப்பரே.எல்.கே, கொசிப் லங்கா மற்றும் டுடே நியூஸ் ஆகிய முன்னணி ஊடகங்கள் இணைந்து "TruePass Media Alliance" என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன.
நேரடித் தரவுகள்
இதன்மூலம் மூன்றாம் தரப்பு தரவுகளைச் சார்ந்திருக்காமல், வாசகர்களின் அனுமதி பெற்ற நேரடித் தரவுகள் (First-party data) மூலம் ஊடகங்கள் தங்களின் டிஜிட்டல் வருவாய் வாய்ப்புகள் மற்றும் வாசகர் அனுபவத்தை மேம்படுத்த முடியும்.

இந்நிகழ்வில் வெகுஜன ஊடக அமைச்சு, கோவ்டெக் (GovTech), தரவு பாதுகாப்பு அதிகாரசபை, தகவல் தொடர்பு தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA), ஃபிடிஸ் (FITIS), தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் விளம்பர முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
TruePass மற்றும் AdStudio.cloud இன் முதன்மை நிர்வாக அதிகாரி (CEO) ஜயோமி லொக்குலியன பேசுகையில், "TruePass என்பது வெறும் லாகின் (login) செய்யும் வசதி மட்டுமல்ல; ஊடக நிறுவனங்கள் தங்களின் வாசகர்களுடன் நேரடி, நம்பகமான உறவை உருவாக்குவதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பாகும்" எனத் தெரிவித்தார்.
மேலும், AdStudio இன் பணிப்பாளர் சுபோத பெரேரா இத்தளத்தின் தொழில்நுட்ப அம்சங்களை விவரித்ததோடு, தற்போதைக்கு மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்கள் மூலம் சரிபார்க்கும் வசதி உள்ளதாகக் கூறினார்.
சர்வதேச ஊடக நிபுணர் டேனியல் ஹெஸ் (Daniel Hess) தனது உரையில், ஊடக நிறுவனங்கள் தங்களின் டிஜிட்டல் உரிமையை (Digital Sovereignty) பாதுகாக்கவும், தரவு சார்ந்த சுதந்திரத்தை நிலைநிறுத்தவும் இத்தகைய முதல் தரவுத் தளங்கள் (First-party data platforms) மிகவும் அவசியம் எனச் சுட்டிக்காட்டினார்.