உக்ரைன் போர் முடிவுக்காக ட்ரம்ப்–புடின் நேருக்கு நேர்
உக்ரைன் (Ukraine) விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் (Donald Trump) மற்றும் ரஷ்ய (Russia) ஜனாதிபதி புடினும் (Vladimir Putin) அலாஸ்காவில் வந்திறங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுக்கு எதிராக, 2022 பெப்ரவரியில் ரஷ்யா போரை ஆரம்பித்தது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் உக்ரைன் மற்றும் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஆர்வம் காட்டி வரும் ட்ரம்ப், புடினுடன் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியுள்ளார்.
இதையடுத்து ட்ரம்பின் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப்புடன் புடினின் சந்திப்புக்கு பின், டிரம்பை சந்திக்க புடின் ஒப்புக்கொண்டார்.
இராணுவ தளம்
இதனடிப்படையில், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்தில் ட்ரம்ப் மற்றும் புடின் இன்று (16) சந்தித்து பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திட்டமிட்டபடி இன்று (16) புடினை சந்திப்பதற்காக தனி விமானத்தில் அலாஸ்காவின் ஆங்கரேஜ் பகுதிக்கு ட்ரம்ப் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் விவகாரம்
தொடர்ந்து அதே பகுதிக்கு புடினும் தனி விமானத்தில் வந்திறங்கியதுடன் முதலில் புடினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு இவரும் பரஸ்பரம் கைகுலுக்கியுள்ளனர்.
இதன்பின்னர் இரு நாட்டு தலைவர்களும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து கொண்டதுடன் தொடர்ந்து இருவரும் மாநாடு நடைபெற உள்ள இடத்தில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.
இரு நாட்டு தலைவர்களும் உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், இந்த சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாக போவதில்லை என்று ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
