டொனால்ட் ட்ரம்பிற்கு நியூயோர்க் நீதிமன்றம் விதித்த அபராதம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை வழங்கியமைக்காக 35.5 கோடி டொலர் அபராதம் விதித்து நியூயோர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொடர்ந்து பல ஆண்டுகளாகத் தன்னுடைய சொத்து மதிப்பு பற்றி தவறான தகவல்களை ட்ரம்ப் தந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நடந்த சிவில் வழக்கு விசாரணையின் முடிவில் பெருந்தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று நீதிபதி ஆர்தர் என்கோரன் தீர்ப்பளித்துள்ளார்
45 கோடி டொலர்
இந்தத் தீர்ப்பின் காரணமாக ட்ரம்ப் குடும்பத்தினர் நடத்திவரும் வணிக நிறுவனம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதுடன், நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் செயற்பட வேண்டிய கட்டாயமும் நேர்ந்திருக்கிறது.
ட்ரம்ப்பிற்கு அபராதம் 35.5 கோடி டொலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதும், அமெரிக்க சட்டப்படி அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பதால் அவர் மேலும் அதிகமாக ஏறத்தாழ 45 கோடி டொலர் வரை செலுத்த வேண்டியிருக்கும் எனக் கூறப்படுகிறது.
ட்ரம்ப்பின் மகன்களுக்கும் தடை
டொனால்ட் ட்ரம்ப், அவருடைய இரு மூத்த மகன்கள், அவருடைய நிறுவனம், நிர்வாகிகள் ஆகியோர் திட்டமிட்டுத் தங்கள் சொத்துகள் பற்றிப் பொய்யான நிதி விபரங்களை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றுக்கு வழங்கி தொடர்ந்து ஏமாற்றிவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் ட்ரம்ப் நியூயோர்க்கில் வர்த்தகம் செய்வதற்க மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன் அவரது மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் ஆகியோருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு இதுபோன்ற தடைகளை நீதிமன்றம் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |