1983 இற்கு பிறகு இஸ்ரேல் - லெபனான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை...! ட்ரம்ப் அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளின் தலைவர்களை நேரடிப் பேச்சுவார்த்தைக்காக வாஷிங்டனுக்கு அழைக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் ஆகியோரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து பிராந்திய அமைதி குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
நீண்ட இடைவெளி
1983-ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதாவது சுமார் நான்கு தசாப்த கால நீண்ட இடைவெளிக்குப் பின் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே நடைபெறும் முதலாவது அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாக இது அமையும் என ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு தரப்பினருமே உண்மையான அமைதியை விரும்புகிறார்கள் எனவும் அந்த அமைதி மிக விரைவில் எட்டப்படும் என்று நான் நம்புகிறேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்கவும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எட்டவும் அமெரிக்கா எடுத்துள்ள இந்த நேரடித் தலையீடு, சர்வதேச இராஜதந்திர மட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில், ட்ரம்பின் இந்த அழைப்பு பிராந்தியத்தில் ஒரு புதிய விடியலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |