ஈரானுடனான போர் நிறுத்தம்...! நெதன்யாகுவுடன் இணைந்து ட்ரம்ப் எடுக்கும் முடிவு
ஈரானுடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டுவருவது என்பது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கும் பரஸ்பர (Mutual) முடிவாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், தானும் நெதன்யாகுவும் இல்லையென்றால் இஸ்லாமியக் குடியரசான ஈரான் இஸ்ரேலை அழித்திருக்கும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமியக் குடியரசு
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “ஈரான் இஸ்ரேலையும் அதைச் சுற்றியுள்ள அனைத்தையும் அழிக்கப் போகிறது.

நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம், இஸ்ரேலை அழிக்க விரும்பிய ஒரு நாட்டை நாங்கள் அழித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஈரானுடனான போர் எப்போது முடிவடையும் என்பதைத் தான் மட்டும் தீர்மானிப்பாரா அல்லது நெதன்யாகுவுக்கும் அதில் பங்கு இருக்குமா என ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பரஸ்பர முடிவு
இதற்குப் பதிலளித்த அவர், "இது ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம், சரியான நேரத்தில் நான் ஒரு முடிவை எடுப்பேன், ஆனால் அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்த முடிவு செய்த பின்னரும் இஸ்ரேல் போரைத் தொடர முடியுமா என ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு “அப்படித் தேவைப்படாது” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |