உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் கை வைத்த ட்ரம்ப் : அமெரிக்காவில் கடும் கொந்தளிப்பு
தனது நிபந்தனைகளை ஏற்க மறுத்த அமெரிக்காவை சேர்ந்த உலக புகழ்பெற்ற ஹாவாட் பல்கலைக்கழகத்துக்கான(Harvard University) 2.2 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பு படி 18,858 கோடி ரூபாய்) மானியங்களை ட்ரம்ப்(donald trump) அதிரடியாக நிறுத்தியுள்ளார்.
பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், ட்ரம்ப், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், ''பல்கலைக் கழகத்தில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும். மாணவர்களின் அனுமதி தகுதி அடிப்படையில் மட்டுமே நடக்க வேண்டும்.
விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனை
பணியமர்த்தல் கொள்கைகளில் மாற்றம், பல்கலைக்கழகத்தின் பன்முகத்தன்மை கொள்கையில் ஆய்வு எனப் பல மாற்றங்களை செய்ய வேண்டும். பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களைத் தடுக்கும் வகையில் மாஸ்க் அணியத் தடை விதிக்க வேண்டும்.
குற்றச் செயல்கள், வன்முறை அல்லது துன்புறுத்தல்களை ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் எந்தவொரு மாணவர் குழு அல்லது கிளப்பை அங்கீகரிக்க அல்லது நிதி அளிக்கக்கூடாது.'' என தெரிவித்திருந்தார். இதனை ஹாவாட் பல்கலை நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது. இது குறித்து ஹாவாட் பல்கலை தலைவர் அலன் காபர்ட்ரம்பிற்கு பதில் கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், ''பேச்சு சுதந்திர உரிமைகளை மீறுவதாகவும், இனம், நிறம் அல்லது தேசிய வம்சாவளியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது போல இருக்கிறது. யாரைச் சேர்க்கலாம். எந்தெந்த படிப்பு மற்றும் துறைகளைத் தொடரலாம் என்பதை எந்த அரசும் சொல்லக்கூடாது.
நிபந்தனைகளை ஏற்க மறுத்த பல்கலை நிர்வாகம்
யூத எதிர்ப்புக் கொள்கையைக் கையாள பல்கலைக்கழகம் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது' என்று தெரிவித்து இருந்தார்.
இதனால் ஹாவாட் பல்கலைக்கான 2.2 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பு படி 18,858 கோடி ரூபாய்) மானியங்களையும், 60 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பு படி 514 கோடி ரூபாய்) ஒப்பந்தங்களையும் ட்ரம்ப் நிர்வாகம் அதிரடியாக நிறுத்தி உள்ளது.
இது குறித்து அமெரிக்க நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சிவில் உரிமைகள் சட்டங்களை நிலைநிறுத்தும் பொறுப்பைக் கடைப்பிடிக்காத பல்கலைக்கழகங்களுக்கு அரசு நிதி கிடைக்காது.
பல்கலைக்கழகங்களில் கற்றல் சீர்குலைவு நடந்து வருகிறது. யூத மாணவர்கள் மீதான துன்புறுத்தல் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகப் புகழ்பெற்ற ஹாவாட் பல்கலைக்கழகத்திற்கான நிதியை நிறுத்தியது அமெரிக்க வட்டாரங்களில் புயலை கிளப்பி உள்ளது.
பல்கலைக்கு ஆதவாக பராக் ஒபாமா
இதேவேளை நேற்று(16) திங்களன்று, பராக் ஒபாமா (Barack Obama )பல்கலைக்கழகத்தை ஆதரித்து பதிவிட்டுள்ளார்.: "ஹாவாட் பல்கலைக்கழகம் மற்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
கல்வி சுதந்திரத்தை நசுக்கும் சட்டவிரோதமான மற்றும் கையாலாகாத முயற்சியை நிராகரித்து, ஹாவாடில் உள்ள அனைத்து மாணவர்களும் அறிவுசார் விசாரணை, கடுமையான விவாதம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் சூழலிலிருந்து பயனடைய முடியும் என்பதை உறுதிசெய்ய உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மற்ற நிறுவனங்களும் இதைப் பின்பற்றும் என்று நம்புவோம்."என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
