சீனா மீதான பாரிய வரி விதிப்பு: எதிர்பாரா திருப்பம் கொடுத்த ட்ரம்ப்
அமெரிக்காவும் (USA) சீனாவுக்கு (China) இடையிலான வர்த்தக போர் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அதன் படி, சீனா மீது விதிக்கப்பட்ட வரி குறைக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அங்கு மேலும் உரையாற்றியதாவது, “145% வரி கொஞ்சம் அதிகம்தான். ஆனால் இந்த அளவுக்கு வரி நீடிக்காது. நிச்சயம் குறைக்கப்படும். ஆனால் அது பூஜ்ஜியமாக மட்டும் இருக்காது.
சீனாவுடனான மோதல்
ஒரு காலத்தில் சீனாவுக்கு எந்த வரியும் இல்லாமல் இருந்தது. இதனால் நாம்தான் அதிகமாக பாதிக்கப்பட்டோம். இனி இதுபோன்ற நிலை இருக்காது.
இனி வரும் காலங்களில் நாமும் நன்றாக நடந்து கொள்வோம். அவர்களும் நன்றாக நடந்து கொள்வார்கள். என்ன இருந்தாலும் அவர்கள் நம்முடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு வர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
விரைவில் முடிவு
அதேநேரம், முதலீட்டாளர்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அமெரிக்க நிதி செயலாளர் ஸ்காட் பெசென்ட், “இந்த அளவுக்கான வரி தொடர்வது சாத்தியமில்லை. தற்போது இருக்கும் வர்த்தக அமைப்பு நீடிக்காது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் நிதி செயலாளர் கருத்துக்கள் வைத்து பார்க்கும் போது சீனாவுடனான மோதல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
