குப்பைக்கு போன போர் நிறுத்தம் : இந்தியாவில் அதிரடி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்
புதிய இணைப்பு
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, காஷ்மீரில் பலத்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவும் (India) , பாகிஸ்தானும் (Pakistan) முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து விதமான தாக்குதல்களும் இன்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், இந்திய - காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் நகரம் முழுவதும் பலத்த குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் "போர் நிறுத்தத்திற்கு என்ன ஆச்சு? ஸ்ரீநகர் முழுவதும் வெடிச்சத்தங்கள் கேட்டன," என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, X இல் பதிவொன்றையும் வைத்துள்ளார்.
இன்று மாலை உள்ளூர் நேரப்படி பல வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் குண்டுவெடிப்புக்கான காரணம் இது வரையில் வெளியாகவில்லை.
இரண்டாம் இணைப்பு
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து விதமான தாக்குதல்களும் இன்று மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் இன்று மாலை (10.05.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் நடைமுறையானது.
போர் நிறுத்தத்துக்கு சம்மதம்
தரை வழி, வான் வழி, கடல் வழி என இரு நாட்டு முப்படைகளும் அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவ தலைமை இயக்குநர்கள் தரப்பிலிருந்து இந்திய இராணுவ தலைமை இயக்குநரகத்தை தொடர்புகொண்டு பேசினார்.
இன்று மாலை 3.35 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு தரப்பும் போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளன”என்றார்.
முதலாம் இணைப்பு
இந்தியாவும் (India) , பாகிஸ்தானும் (Pakistan) முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் உத்தியோகபூர்வ ட்ரூத் பக்கத்தில் பதிவொன்றை வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த சமூக ஊடக பதிவில் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாவது “அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நீண்ட இரவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
போர் நிறுத்தம்
"பொது அறிவு மற்றும் சிறந்த நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்கள். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!"என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் டார் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தெரிவித்திருந்த நிலையில் ட்ரம்ப் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
