போர் நிறுத்தத்தை மீறிய பாகிஸ்தான் : பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்
புதிய இணைப்பு
பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்துக்கு பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி முக்கிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (11.05.2025) மோடியின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை இந்தியாவுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை உரியவகையில் செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தை பாதித்து அமைதி, செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கிய அதன் பயணத்தைத் தடுத்த பிரச்சினைகளைத் தீர்ப்பதில், இந்த போர் நிறுத்தம், ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது என்று பாகிஸ்தான் நம்புவதாக பிரதமர் செபாஸ் செரீப் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
போர் நிறுத்தத்திற்கு பிறகு இந்திய எல்லையில் பாகிஸ்தான் (Pakistan) மேற்கொண்ட தாக்குதலுக்கு இந்திய வெளிவிவகார செயலாளர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டதாகவும், அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் (Jammu & Kashmir) பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாத தாக்குதல்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.
பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக கடந்த 07ஆம் திகதி இந்தியா பதில் தாக்குதலை மேற்கொண்டது.
இவ்வாறான பின்னணியில், இந்தியாவும் (India) , பாகிஸ்தானும் (Pakistan) முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
போர் நிறுத்தம்
இதையடுத்து , இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து விதமான தாக்குதல்களும் மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இவ்வாறு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது.போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களின் பின்னர் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடும் எச்சரிக்கை
இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் மீண்டும் மீறப்பட்டதாகவும், பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியதாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க ஆயுதப் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் மீண்டும் மீண்டும் எல்லை மீறல்கள் நடந்தால், அவற்றைக் கடுமையாக எதிர்கொள்ள அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
