ஈரான் எங்களை பிளாக்மெயில் செய்ய முடியாது: ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையை மூடுவதன் மூலம் அமெரிக்காவை ஈரான் ஒருபோதும் பிளாக்மெயில் செய்ய முடியாது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெஹ்ரானை எச்சரித்துள்ளார்.
ஈரானியத் துறைமுகங்கள் மீது ஏப்ரல் 14 முதல் அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகைக்குப் பதிலடியாக நீரிணையின் மீதான தனது கட்டுப்பாட்டை மீண்டும் தீவிரப்படுத்துவதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த எதிர்வினையை ஆற்றியுள்ளார்.
ஈரானுடன் மிகவும் நல்ல முறையில் உரையாடல் நடந்து வருவதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அதே சமயம் இந்த முக்கியமான எண்ணெய் வழித்தடத்தை மீண்டும் மூடுவதன் மூலம் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முற்றுகை
ஈரான் தரப்பில் ஹோர்முஸ் நீரிணையில் முகாமிட்டுள்ள கடற்படையினர், இன்று அந்தப் பகுதியைக் கடக்க முயன்ற வணிகக் கப்பல்களுக்கு ரேடியோ செய்திகள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தச் செய்திகளில் நீரிணை வழியாக இனி எந்தக் கப்பல்களும் அனுமதிக்கப்படமாட்டாது என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் முற்றுகை என்பது போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறும் செயல் எனத் தெஹ்ரான் குற்றம் சாட்டும் அதே வேளையில் ஈரானின் இந்தத் திடீர் பின்வாங்கலால் சர்வதேசக் கப்பல் போக்குவரத்தில் பெரும் குழப்பம் நீடிப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |