ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகை நீக்கப்படாது : ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
ஈரானுடன் ஓர் உடன்பாட்டிற்கு வரும் வரை ஈரான் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முற்றுகைகள் நீக்கப்படமாட்டாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான புதிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமா என்பது குறித்த நிச்சயமற்ற நிலை நிலவி வரும் சூழலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஆரம்பமான இந்தத் துறைமுக முற்றுகையினால் ஈரான் முற்றிலும் அழிந்து வருவதாக ட்ரம்ப் தனது 'Truth Social' சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
அத்துடன், இந்த மோதலில் தனது நாடு முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக போர்நிறுத்தம் வரும் புதன்கிழமையுடன் முடிவடையவுள்ள நிலையிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அமைதிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் பாகிஸ்தானில் நடைபெறுமா என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில் இந்தச் சந்திப்பை முன்னிட்டு பாகிஸ்தான் தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை
அமெரிக்கத் தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கவுள்ள அமெரிக்கத் துணை ஜனாதிபதி J.D. Vance இதுவரை வொஷிங்டனில் இருந்து புறப்படவில்லை என்பதுடன், இந்தப் பேச்சுவார்த்தையில் தாம் கலந்துகொள்வதா இல்லையா என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

இதேவேளை முற்றுகை தொடங்கியதிலிருந்து, 27 கப்பல்களைத் திரும்பிச் செல்லுமாறு அல்லது ஈரானியத் துறைமுகத்திற்கே திரும்புமாறு அமெரிக்கப் படைகள் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை, இந்த மோதலில் முதல் முறையாக அமெரிக்கா இடைமறித்துக் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |