கனடா மீது 100 சதவீத இறக்குமதி வரி..! ட்ரம்ப் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை
சீனாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்டதற்காக கனடா மீது 100 சதவீத இறக்குமதி வரி (Tariff) விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது வட அமெரிக்க நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
கனடா சமீபத்தில் சீனாவுடன் மேற்கொண்ட வர்த்தக உடன்படிக்கை, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ட்ரம்ப் தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்தார்.
அமெரிக்காவிற்கு இறக்குமதி
இதன் தொடர்ச்சியாக தற்போது கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்கள் மீதும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
குறித்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால், கனடாவின் வாகன உற்பத்தி மற்றும் எரிசக்தித் துறைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும்.

இந்தநிலையில், அமெரிக்காவின் மிரட்டலுக்கு பிரதமர் மார்க் கார்னி தொடர்ந்து தனது தரப்பு விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றார்.
இதனடிப்படையில், அண்மையில் கனடா ஒரு சுதந்திர நாடு எனவும் தனது பொருளாதார நலன்களுக்கு ஏற்ப முடிவெடுக்க அதற்கு உரிமை உண்டு எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
கச்சா எண்ணெய்
அத்தோடு, வர்த்தகப் போரினால் இரு நாட்டு மக்களுமே பாதிக்கப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
இதனுடன் இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிரட்டல் அரசியலில் ஈடுபடுவதாகச் சீனா குற்றம் சாட்டி இருந்தது.

அத்தோடு கனடாவுடனான தனது ஒப்பந்தம் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டது எனவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவிற்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் வாகன உதிரிபாகங்கள் பெரும் அளவில் கனடாவிலிருந்தே வருகின்றன.
இந்த சூழ்நிலையில் 100 சதவீத வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவிலும் பொருட்களின் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |