துருக்கியை மையப்படுத்தி ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி தகவல் - மனிதாபிமான அமைப்புகளுக்கு அடுத்த சவால்
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மனிதாபிமான அமைப்புகளுக்கு அடுத்த சவால் துருக்கி மற்றும் சிரியாவை பாதித்த வலுவான பூகம்பத்தில் இருந்து தப்பியவர்களை உயிருடன் வைத்திருப்பதாகும்.
ஆயிரக்கணக்கான உயிர் பிழைத்தவர்கள் தற்போது தங்குமிடம், தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் அவலநிலையில் உள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கத்தின் பக்கவிளைவுகளால் பலர் எதிர்காலத்தில் இறக்க நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
தேடும் பணிகள்

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறக்கூடிய அபாயம் இருப்பதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,000ஐ தாண்டியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டு 76 மணி நேரத்திற்கும் மேலாகியும், இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா இந்தியா

இதற்கிடையில், 35 டொன் உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளுடன் 100 மருத்துவ நிபுணர்களைக் கொண்ட மீட்புக் குழுவை அனுப்பியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதேபோல், இந்த கடினமான நேரத்தில் துருக்கிய மக்களுக்கு ஆதரவளிக்க 04 இந்திய நிவாரணக் குழுக்கள் ஏற்கனவே துருக்கியின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடவடிக்கைகளில் இணைந்துள்ளதாகவும் இந்தியா கூறுகிறது.
அவர்களில் 02 மீட்புக் குழுக்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்கள் மற்றும் மருத்துவக் குழுக்கள் என இந்தியா கூறுகிறது.
பேரிடர்

அதுமட்டுமின்றி, துருக்கி மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்களும், குளிர் காலநிலையில் இருந்து பாதுகாப்பதற்கான போர்வைகளும் ஏற்கனவே துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போதைய பேரிடர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேவைக்கு ஏற்ப நிவாரண சேவைகளை மேலும் விரிவுபடுத்த இந்தியா தயாராக இருப்பதாகவும் துருக்கிக்கு இந்தியா தெரிவித்துள்ளது.