இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு : துருக்கி அதிபர் வெளியிட்ட கருத்து
ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நீடித்து வருகின்ற நிலையில் 11 ஆயிரம் பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2,700 பேர் காணாமல் போயுள்ளனர்.
இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளதுடன் 240 பேர் இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு பணயக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ளனர். தற்போது அவர்களை மீட்கும் பணியில் இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஈடுபட்டு வருகிறது.
எர்டோகனின் கருத்து
இதனிடையே காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. அத்துடன் அந்த மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "ஒரு நகரத்தையும், அதன் மக்களையும் முழுமையாக அழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு என்பதை தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ''காசாவில் கொடூரமான தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலின் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நிச்சயம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள்" என்றும் அவர் கூறினார்.
நெதன்யாகு கண்டனம்
இதேவேளை எர்டோகனின் கருத்துக்கு இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"பயங்கரவாதத்தை ஆதரிக்கும் சில சக்திகள் இருக்கின்றன. குறிப்பாக துருக்கி அதிபர் எர்டோகன், இஸ்ரேலை பயங்கரவாத நாடு என்று கூறுகிறார். ஆனால் துருக்கி கிராமங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார். இவர்களிடம் இருந்து எந்த அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |