கரூர் செல்ல அனுமதி கோரி விஜய் எடுத்த நடவடிக்கை
புதிய இணைப்பு
கரூர் செல்ல விஜய் சார்பில் சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் அனுமதி கோரப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய த.வெ.க கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்க சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் மின்னஞ்சல் மூலம் அனுமதி கோரி உள்ளோம்.
கரூர் செல்ல அனுமதி
சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு இன்று நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்த 33 பேரின் குடும்பத்தினருடன் விஜய் காணொளி அழைப்பு மூலம் பேசியுள்ளார் என அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
விஜய் கரூர் செல்ல அனுமதி வழங்கினால் அப்போது அவருக்குரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (Vijay) கரூர் செல்ல எந்த தடையும் இல்லை என தமிழக அரசு தெரிவித்ததாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் செப்டம்பர் மாதம் 41 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி மக்கள் பலியான சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அனுமதி கிடைத்ததும் கண்டிப்பாக
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சி.பி.ஐ.-க்கு மாற்ற மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. நிர்வாகி உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
நீண்ட விமர்சனங்கள் மற்றும் மௌனத்தின் பின்னர் கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் காணொளி அழைப்பில் தவெக தலைவர் விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர்களிடம், நான் உங்களுடன் இருக்கிறேன். எனக்கு அனுமதி கிடைத்ததும் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் வீட்டிலேயே வந்து சந்திக்கிறேன் என்று விஜய் பேசியதாக கூறப்படுகிறது.
காணொளி அழைப்பில் பேசியபோது புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க வேண்டாம் என விஜய் வேண்டுகோள் விடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் செல்ல எந்த தடையும் இல்லை
இந்நிலையில், விஜய் கரூர் செல்ல தடை எதுவும் இல்லை. நீதிமன்றம் தடையும் இல்லை. போலீஸ் கட்டுப்பாடும் இல்லை. அவர் போக நினைத்தால் காவல்துறையினரிடம் பாதுகாப்பிற்கு சொல்லிவிட்டு சென்று இருக்கலாம்.
இல்லையென்றால் அவர் கட்சி நிர்வாகிகளை அனுப்பி இருக்கலாம். ஆனால் விஜய் இரண்டையும் செய்யவில்லை.
ஆனால் அனுமதி கிடைத்தவுடன் நேரில் வந்து பார்க்கிறேன் என்று விஜய் கூறுவது எதோ அரசு தடை போட்டது போல அவர் காட்டிக்கொள்ள முயல்கிறார்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் செல்ல எந்த தடையும் இல்லை.. அவர் தான் செல்லாமல் இருக்கிறார் என்று தமிழக அரசு தெரிவித்ததாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
