வெளிநாட்டு மோகம் காட்டி லட்சக்கணக்கில் மோசடி! சிக்கிய இளைஞர்கள்
அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி சட்டவிரோதமாக விசா ஆலோசனை மையமொன்றை நடத்திய குற்றம்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (12) கண்டியில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டின் பேரில் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
கண்டியில் “EGA Visa Consultancy” என்ற பெயரில் இயங்கிய நிறுவனம், அவுஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து ரூ. 35 இலட்சம் (ரூ. 3.5 மில்லியன்) பெற்றுக்கொண்ட பின்னரும் வேலைவாய்ப்புவழங்கவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் நேற்று அந்த நிலையத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்க தேவையான செல்லுபடியாகும் உரிமம் இன்றி நிறுவனம் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கை
அதன்போது, கம்பளை மற்றும் தலாத்துஓயாவை சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சோதனையில் ஏழு வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள், ஐந்து வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் பல பணப்பரிவர்த்தனை ரசீது புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (13) கண்டி நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |