முக்கிய குற்றவாளிக்கு கடவுச்சீட்டு: விசாரணையில் சிக்கிய இருவர்
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு போலி தகவல்களை வழங்கி, தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளியான பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மேவுக்கு இரு கடவுச்சீட்டுகளை பெற்று கொடுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
32 மற்றும் 51 வயதுடைய சந்தேக நபர்கள் கெஹெல்பத்தர பத்மேவின் புகைப்படத்தை வட்ஸ்அப் மூலம் பெற்று, அதைத் திருத்தி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு மோசடியாக வழங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
சந்தேக நபர்கள் பத்தரமுல்ல மற்றும் கொஹுவலவில் அமைந்துள்ள ஸ்டுடியோக்களின் உரிமையாளர்கள் என்றும் எஹலியகொட மற்றும் மாளிகாவத்தையில் வசிப்பவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மே 2014 இல் வழங்கப்பட்ட கடவுச்சீட்டை பயன்படுத்தி 2021 இல் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், அவரது பாஸ்போர்ட் 2024 இல் காலாவதியாகியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், வெளிநாட்டில் இருந்தபோது தனது புகைப்படம் மற்றும் விவரங்களை மோசடியாக வழங்கி 2024 இல் புதிய கடவுச்சீட்டை பெற்றுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
அத்துடன், அவர் 2025 இல் தனது புகைப்படங்களுடன் வேறு இரண்டு பெயர்களில் இரண்டு கடவுச்சீட்டுகளையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் மே 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
