ஆப்கானில் அரைமணிநேரத்தில் இருவேறு நிலநடுக்கங்கள் : மக்கள் அதிர்ச்சி
ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 எனப் பதிவாகியுள்ளது.
முதல் நிலநடுக்கமானது, பைசாபாத் (Fayzabad) நகரத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் 80 கி.மீ. ஆழத்தில், 4.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, பைசாபாத் நகரத்தில் இருந்து 100 கி.மீ தொலைவில் 140 கி.மீ ஆழத்தில், 4.8 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்
இந்த நிலநடுக்கத்தால் வீடுகளும் அதிர்ந்ததால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒக். 07-ல் ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் காலை 11 மணி முதல் 12 மணி வரை அடுத்தடுத்து 4 முறை பூகம்பங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 5.5, 5.9, 6.2, 6.3 என்று பதிவாகின.
முன்னதாக 4000 பேரை பலியெடுத்த நிலநடுக்கம்
தொடர்ந்து பலமுறை நிலஅதிர்வுகளும் ஏற்பட்டன. இந்த பூகம்பத்தால் ஹெராத் பகுதியில் 20 கிராமங்கள் முழுமையாக நாசமாகின. 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர், மேலும் 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றையதினம் ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |