கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலைவேளை இந்திய பிரஜைகள் இருவர் கைது
தங்கம் கடத்தல்
ஒரு கோடியே எண்பது இலட்சம் ரூபா (18 மில்லியன் ரூபா) பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த இரண்டு இந்திய விமானப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்றுமுன்தினம் அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 28 மற்றும் 38 வயதுடைய இரண்டு வர்த்தகர்கள், அவர்கள் இருவரும் அடிக்கடி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே விமானம் மூலம் வணிகம் செய்பவர்கள்.
அதிகாலைவேளை வந்திறங்கிய இருவர்
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E1207 மூலம் இந்தியாவின் சென்னையில் இருந்து 08/20 அதிகாலை 02:00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் பயன்படுத்தாத "கிரீன் சனல்" ஊடாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்பட்ட போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகைகளுக்கு வெள்ளி முலாம்
அவர்கள் அணிந்திருந்த சொக்ஸ் மற்றும் உள்ளாடைக்குள் இருந்து 01 கிலோ 200 கிராம் எடையுள்ள இந்த நகைகளை அதிகாரிகள் எடுத்துள்ளனர். தங்கம் இல்லை என்று சுங்கத்துறை அதிகாரிகளை நம்பவைப்பதற்காகவும், அவர்களை தவறாக வழிநடத்துவதற்காகவும் நகைகளுக்கு வெள்ளி முலாம் பூசப்பட்டன.
தற்போது, இந்த இரண்டு இந்திய பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

