உக்ரைனில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதல்! இருவர் பலி - 20 பேர் படுகாயம்
உக்ரைனின் வடக்குப் பகுதியிலுள்ள சுமி நகரில் உள்ள ஒரு வணிக வளாகம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் இருவர் பலியாகியுள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆரம்பத்தில் மூவர் உயிரிழந்ததாகத் தெரிவித்த ஆளுநர் ஹிரிகோரோவ், பின்னர் டெலிகிராம் தளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு என்று திருத்திப் பதிவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலால் அப்பகுதியில் கடும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் ஆளுநர் வெளியிட்ட புகைப்படங்களில் கட்டிடம் மிக மோசமாகச் சேதமடைந்து, இடிபாடுகள் தரையில் சிதறிக் கிடப்பது காணக் கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து மீட்புப் பணி
பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள சுமி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் நீண்டகாலமாக தீவிர தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், இப்பகுதியில் ஒரு பாதுகாப்பு இடைவெளி மண்டலத்தை உருவாக்க விரும்புவதாக ரஷ்யா ஏற்கனவே தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25