தென்னிலங்கையில் கொடூரம் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் வெட்டிக்கொலை - ஒருவர் படுகாயம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மீது நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
தாக்குதலில், 73 வயதுடைய பெண்ணொருவரும் 35 வயதுடைய ஆண் ஒருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கோர சம்பவம் காலி - தெலிகட காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாவடவில, 13 ஏக்கர் பகுதியில் இன்று (03) காலை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் கைது
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தாக்குதலில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குறித்த குடும்பத்தின் பாட்டி மற்றும் அவரது பேத்தியின் கணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர் உயிரிழந்தவரின் பேத்தியின் மகளாவார். தாக்குதலினால் அவரது ஒரு கை உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது கராபிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் தெலிகட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாகவே சந்தேக நபர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை காலி மற்றும் தெலிக்கடை காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 4 நாட்கள் முன்