கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட உதார நிர்மல் குணரத்ன மற்றும் நளின் துஷாந்த ஆகிய இரண்டு சந்தேக நபர்களும் இன்று (03) கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
விசாரணைகள்
இந்த சந்தேக நபர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டதாகவும், தடுப்புக்காவல் உத்தரவுகள் முடிவடைந்த பின்னர் இன்று அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றுக்கு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.
நீதிமன்ற உத்தரவு
அதன்படி, முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த தலைமை நீதவான், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி சிம் அட்டையை பெறுவதற்கு இந்த சந்தேக நபர்கள் உதவி செய்ததாகவும், அதன்படி சந்தேகத்தின் பேரில் அவர்களைக் கைது செய்ததாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
