ஐக்கிய அரபு இராச்சியத்திடம் ஒத்துழைப்பும் இந்தியாவிடம் கடனும் கோரியுள்ள சிறிலங்கா!
இலங்கையின் எரிவாயு தேவையை பூர்த்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கம் ஐக்கிய அரபு இராச்சியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை இலங்கைக்கு அவசியமான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் அரசாங்கம் கடனுதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வின் பக்க நிகழ்வாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் தொழில் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி. சுல்தான் அல் ஜாபரைச் சிறிலங்கா வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் சந்தித்து கலந்துரையாடினார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யானுடனான தனது நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த அமைச்சர் பீரிஸ் அவரை விரைவில் இலங்கைக்கு வரவேற்கக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
சர்வதேச கடல்சார் அமைப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கையும் ஐக்கிய அரபு இராச்சியமும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைக் கொண்டமை குறித்து ஆராயப்பட்டது.
அத்துடன் பல்வேறு நிபந்தனைகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை நாடுகளின் மீது சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அனைத்துக் கொள்கைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு கொள்கை முடிவுகளை வழங்காது என்றும் இரு அமைச்சர்களும் தெரிவித்தனர்.