ஒருபோதும் இடமளியோம்! அரசை எச்சரிக்கும் உலபனே சுமங்கல தேரர்
துறைமுக நகரம் பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் மீது நாடளாவிய ரீதியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவரும், தென்னிலங்கையைச் சேர்ந்த பிரபல பௌத்த தேரருமான உலபனே சுமங்கல தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை அரசாங்கம் நடத்தினால் ஒட்டுமொத்த மக்களும் இணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
அரசாங்கத்திற்கு மக்களின் உயிரைக் காப்பாற்றுவதது முக்கியமல்ல, எப்படியாவது நாட்டை முடக்கம் செய்யாமல், கொாரனா தொற்றினால் மக்கள் உயிரிழந்தாலும் அவர்களின் உடல்களின் மேல் நின்றுகொண்டு நாடாளுமன்றத்தை இரண்டு நாட்களுக்காவது நடத்துவதே அரசாங்கத்தின் திண்ணமாகும்.
நாடாளுமன்றத்திற்குள் போர்ட் சிட்டி என்கின்ற சீனத் தனிநாட்டை ஸ்ரீலங்காவிற்குள் உருவாக்கிக் கொடுப்பதற்கான சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இப்படியான கொரோனா அழிவுக்கு மத்தியிலும் அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற மற்றும் மரணங்களும் அதிகரிக்கின்ற இப்படியான சூழலில் நாடாளுமன்றத்திலும் 225 உறுப்பினர்கள் ஒன்றுசேர்வதற்கு எதிராக மக்களும், மகாநாயக்க தேரர்களும் இணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட வேண்டும்.
தனிமைப்படுத்தல் சட்டமானது முழு நாட்டிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் மாத்திரம் எப்படி 225 பேர் ஒன்றுசேர முடியும்?
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்களுக்கும், தேசிய பாதுகாப்பிற்கும் முன்னுரிமையளிக்காமல் அரசாங்கம் சீனாவுக்கு ஒருபகுதியை அளிப்பதற்குரிய போர்ட் சிட்டிக்கான ஆணைக்குழுச் சட்டமூலத்தை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்கின்றது. இதற்கு ஒருபோதும் மக்கள் இடமளிக்கக்கூடாது என்றார்.