லண்டனில் நட்சத்திர விடுதியாகும் உயரமான கோபுரம்!
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உள்ள "பிடி டவர்" எனப்படும் உயரமான கோபுரம் நட்சத்திர விடுதியாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
பல வருடங்களாக இதனை பொதுமக்கள் நேரடியாக பயன்படுத்த முடியாமல் இருந்த நிலையில், அவர்களின் நேரடியான பயன்பாட்டுக்காக தற்போது மாற்றியமைக்கப்படுவது உற்சாகம் அளிக்கும் செய்தியாக அந்த நகரில் பார்க்கப்படுகிறது.
பிடி டவர்
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் உலக கட்டிடக்கலை துறையின் சிறப்புகளை உணர்த்தும் பல கட்டிங்கள் உள்ளன.
அவற்றில் ஒன்று லண்டனின் வெஸ்ட் எண்ட் பகுதியில் உள்ள "பிடி டவர்" எனப்படும் 620 அடி உயர கோபுரம். இது 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோபுரம் ஆகும்.
இந்த கோபுரத்தின் மத்திய பகுதி 581 அடிகள் உயரம் கொண்டது. பிடி டவரை 1965 ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ஹெரால்ட் வில்சன் திறந்து வைத்தார்.
விற்பனை
அதன் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி எல்.ஈ.டி. (LED) திரை செய்திகளை ஒளிபரப்பியது.
இந்த கோபுரத்தை தொடக்கத்தில் தொலைக்காட்சி சிக்னல்கள் அனுப்ப பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், பிடி டவரின் உரிமையாளராக இருந்த பிடி குழுமம் (BTGroup), அதனை எம்சிஆர் ஹோட்டல்கள் (MCR Hotels) குழுமத்திற்கு 347 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்து விட்டதாக அறிவித்தது.
மாற்றியமைக்கப்படும் கோபுரம்
தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்பம் பரவலான பிறகு, தகவல் தொடர்பில் இந்த கோபுரத்தின் பயன்பாடு குறைய தொடங்கியதால் இதில் பொருத்தப்பட்டிருந்த நுண்ணலை ஏரியல்கள் நீக்கப்பட்டன.
இதனையடுத்து, இந்த பழமையான கட்டடத்தை அதன் பெருமை குறையாமல் மேம்படுத்தி புதிய தலைமுறையினருக்கு சுகமான அனுபவத்தை வழங்கும் முயற்சியை முன்னெடுப்பதில் மகிழ்ச்சியடைவதாக எம்சிஆர் ஹோட்டல்கள் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டைலர் மோர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் இந்த கோபுரத்தின் உச்சியில் ஒரு சுழலும் உணவகம் இருந்ததும், அது சுற்றி முடிக்க 22 நிமிடங்கள் எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |