அதிகரிக்கும் போர் பதற்றம்...! ஈரானுக்கு பிரித்தானியா விடுத்த நேரடி எச்சரிக்கை
பிரித்தானிய இராணுவத் தளங்கள், நிலப்பரப்பு அல்லது நலன்களை நேரடியாகக் குறிவைக்க வேண்டாம் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சிற்கு (Abbas Araghchi) நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையைப் பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் இவெட் கூப்பர் (Yvette Cooper) விடுத்துள்ளார்.
தொலைபேசி வழியாகக் குறித்த உரையாடல் இடம்பெற்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேரடி ஆக்கிரமிப்பு
ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்தினால் அது தங்களுக்கு எதிரான நேரடி ஆக்கிரமிப்பாகக் கருதப்படும் என ஈரான் அச்சுறுத்தல் விடுத்திருந்தது.
இதற்குப் பதிலடியாகவே இவெட் கூப்பர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவினால் மேற்கொள்ளப்படும் தற்காப்பு நடவடிக்கைகள் அனைத்தும், வளைகுடா நட்பு நாடுகளுக்கு எதிராக ஈரான் முன்னெடுக்கும் ஆக்கிரமிப்பிற்கு அளிக்கப்பட்ட முறையான பதிலடியாகும் எனப் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தநிலையில், மத்திய கிழக்கில் நிலவும் இந்த மோதல் சூழலுக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வைக் காணப் பிரித்தானியா விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளைத் தனது பாதுகாப்பு நலன்களில் சமரசம் செய்யப்போவதில்லை எனவும் பிரித்தானியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |