பிரித்தானியாவில் மூன்றே வருடங்களில் நிரந்தர குடியுரிமை பெறப்போகும் தரப்பு
பிரித்தானிய அரசு, அதிக வருமானம் பெறும் நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு மூன்று ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வாய்ப்பை அறிவித்துள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் இடம்பெறாத மிகப் பெரிய குடிவரவு சீர்திருத்தமாக இது வரையறுக்கப்படுகிறது.
உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வருடத்திற்கு 1 லட்சத்து 25 ஆயிரம் பவுண்ட்களுக்கு மேல் சம்பாதிக்கும் நபர்கள், குறிப்பிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், மூன்று ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள்.
அவசியமான நிபந்தனைகள்
வேலைவாய்ப்பு நிலை தெளிவானதாக இருக்க வேண்டும், குற்றவியல் பதிவுகள் இல்லாதிருக்க வேண்டும், உயர்ந்த தரத்தில் ஆங்கிலம் பேசும் திறன் மற்றும் எந்தவொரு அரசுச் சலுகைகளும் கோராத நிலை ஆகியவை அவசியமான நிபந்தனைகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள விதிகளின் படி, பொதுவாக ஐந்து ஆண்டுகள் கழித்து நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு நேரடி பங்களிப்பு செய்யும் திறமையான நபர்களை ஊக்குவிக்கும் நோக்கில் புதிய திட்டம் விரைவான குடியுரிமை பாதையை உருவாக்கும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, சுகாதாரத் துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தற்போதைய மூலக்கட்டமைப்பின் கீழ் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறுவார்கள்.
ஆனால் குறைந்த சம்பளத்துடன் வந்துள்ள ஆறுலட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், புதிய விதிப்படி பதினைந்து ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த மாற்றத்தின் விளைவு
மேலும், சட்டவிரோதமாக தங்கியிருப்போர் மற்றும் விசா காலாவதியானவர்கள் 30 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

2021 முதல் பிரித்தானியாவில் குடியேறிய சுமார் இரண்டு மில்லியன் பேருக்கு இந்த மாற்றங்கள் தாக்கம் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
2030ஆம் ஆண்டுக்குள் 1.6 மில்லியன் பேர் திருத்தப்பட்ட விதிகளின் கீழ் குடியுரிமைக்கு தகுதி பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
அதிக வருமானம் உள்ள திறமையான நபர்களுக்கு வேகமான குடியுரிமை வழங்குவதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிப்பதே இந்த புதிய குடியேற்றத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக பிரித்தானிய அரசு வலியுறுத்துகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்