பிரித்தானியாவின் பணவீக்க நிலை 40 ஆண்டுகளுக்குப் பின் புதிய உயர்வு
பிரித்தானியாவின் பணவீக்க நிலை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய உயர்வுடன் 10.1 வீதத்தை பதிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில் 1982 க்குப் பின்னர் முதன் முறையாக பிரித்தானிய பணவீக்கம் இரட்டை எண்ணியலுக்கு உயர்ந்துள்ளது.
பிரித்தானியர்களுக்குரிய புதிய கசப்புச்செய்தியொன்றை அதன் தேசிய புள்ளியியல் பணியகம் இன்று காலை வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் உணவுப் பணவீக்கம்
அதன் அடிப்படையில் பாண், பால், மற்றும் தானியங்கள் சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டி வகைகள் தயிர் மற்றும் முட்டை உட்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளன.
இன்று அறிவிக்கப்பட்ட இந்த பணவீக்க அதிகரிப்பானது ஏற்கனவே தமது மின்சார மற்றும் எரிவாயு கட்டணங்களை செலுத்த போராடும் குடும்பங்களுக்கு புதிய பாதக செய்தியாக மாறியுள்ளது.
இப்போதைய நிலையில் பிரித்தானியாவின் உணவுப் பணவீக்கம் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக உள்ளது. குறிப்பாக பதினொரு உணவு வகைளின் விலைகள் அதிகரித்துசெல்கின்றன.
சராசரி வருமானம் 3 வீத்தால் வீழ்ச்சி
இதனால் குடும்பத்தலைவர்களும் குடும்பத்தலைவிகளும் தமது குடும்ப வரவு செலவுத் திட்டங்களில் பெரும் அழுத்தத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
பணவீக்கம் காரணமாக பிரித்தானியர்களின் சராசரி வருமானம் 3 வீத்தால் குறைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பொருளாதாரம் இந்த வருடத்தில் இருந்து தீவிரமான மந்தநிலைக்குள் செல்லும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அனைத்து பக்கங்களிலிருந்தும் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவது பரிதாபகரமான நிலையாக மாறியுள்ளது.
