அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள எலிசபெத் மகாராணியின் பூதவுடல் - திடீரென சரிந்து வீழ்ந்த காவலாளி!
வெஸ்ட்மின்ஸ்டரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் அடங்கிய பேளையை காவல்காக்கும் பாதுகாப்பு அதிகாரி திடீரென மயங்கி விழுந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கு செப்டம்பர் 19ஆம் திகதி திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வைத்து நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக பிரித்தானிய பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு ராணியின் பூத உடல் அடங்கிய பேளை கொண்டுவரப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலிக்காக
பொதுமக்கள் அஞ்சலிக்காக பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பூத உடல் நான்கு நாட்களுக்கு வெஸ்ட்மின்ஸ்டர் ஹோலில் வைக்கப்பட்ட உள்ளது.
இந்த நிலையில் நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் ஹோலிற்கு கொண்டுவரப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு காவல் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் திடீரென நிலைதடுமாறி தரையில் விழுந்துள்ளார்.
ராணியின் உடலின் அருகே மிக நெருக்கமாக காவல் பணிபுரிந்து வந்த கருப்பு நிற சீருடை அணிந்த காவல் அதிகாரி திடீரென நிலைதடுமாறி முகம் தரையில் மோதும் படி சரிந்து விழுந்தார்.
ஒளிபரப்பில் தடை
காவலர் சரிந்து விழுந்ததும், உடனடியாக அருகில் இருந்த இரு காவலர்கள் அவருக்கு தக்க உதவி செய்ததும், மீண்டும் வழமைக்கு திரும்பி தனது பணியை தொடர்ந்தார்.
காவலர் மயங்கி விழுந்தது அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அத்துடன் காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் நிகழ்ச்சியை நேரலையில் வழங்கி கொண்டு இருந்த சர்வதேச ஒளிபரப்பும் சிறிது நேரம் தடைபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
