உக்ரைனின் சரமாரியான தாக்குதல் : ஸ்தம்பிதம் அடைந்த ரஷ்யாவின் தொடருந்து சேவை
உக்ரைன் (Ukraine) நடாத்திய சரமாரி டிரோன் தாக்குதலில் வோரோனேஜ் தொடருந்து நிலையத்தில் உள்ள மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதால் தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய (Russia) ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய இராணுவம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் இராணுவம் எதிர்கொண்டு தொடர்ந்து போரிட்டு வருகிறது.
இந்த சூழலில் உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளிடையே மீண்டும் பயங்கர மோதல் நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்புத்துறை
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் படைகள் நடத்திய 12 தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாகவும், சுமார் 450 உக்ரைன் இராணுவ வீரர்கள் இந்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதோடு உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான 2 பீரங்கிகள், 3 காலாட்படை தாக்குதல் வாகனங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ரஷ்யாவின் பெல்கோரோட், ரோஸ்டோவ் உள்ளிட்ட பிராந்தியங்களில் உக்ரைன் சரமாரி ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி உள்ளது.
ஆளில்லா விமானங்கள்
அவற்றில் 50-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை ரஷ்ய வான்பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
எனினும் இந்த தாக்குதலில் வோரோனேஜ் தொடருந்து நிலையத்தில் உள்ள மின்கம்பிகள் சேதமடைந்தன. இதனை சரிசெய்யும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பாதுகாப்பு கருதி அந்த வழித்தடத்தில் தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக உக்ரைன் நாட்டின் தகவல்படி, மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையத்தில் ஒரு சரக்கு தொடருந்து வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
You May Like This...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |