ரஷ்ய இராணுவத்தில் வேலைவாய்ப்பு! மோசடியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது
ரஷ்ய இராணுவத்தில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து இலங்கையர்களிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் உள்ளிட்ட இருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிக சம்பளத்தை எதிர்ப்பார்த்து அண்மைய நாட்களில் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகளவான அதிகாரிகள் ரஷ்யா இராணுவத்தில் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்யா இராணுவத்தில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து பணம் பெற்றுக் கொண்ட சம்பவமொன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.
கைது நடவடிக்கை
வாரியபொல பகுதியைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரும் கண்டியை சேர்ந்த நபரொருவரும் இந்த பணமோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிரோதமாக 43 பேரை இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கைதான இரண்டு பேரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஓய்வுபெற்ற இலங்கையின் முப்படையினர், ரஷ்யா இராணுவத்தில் இணைவதை தவிர்க்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |