மீண்டும் கொதிநிலையடையும் போர் பதற்றம்! முக்கிய நகரை கைப்பற்றியது ரஷ்யா
கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள அவ்டீவ்கா நகரை ரஷ்யப் படையினர் நேற்று சனிக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து சில நாள்களில் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அந்த நாட்டுக்குக் கிடைத்துள்ள வெற்றி, ரஷ்ய படையினருக்கு உற்சாகத்தை அளிக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து உக்ரைன் தளபதி ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ரஷ்ய படையினரின் ஆக்கிரமிப்பு
ரஷ்ய படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து அவ்டீவ்கா நகரைப் பாதுகாத்து வந்த உக்ரைன் படையினர், அந்த நகரிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்ய ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு, அதன் விளைவாக உக்ரைன் வீரர்களின் உயிருக்கும், உடல்நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைக்கேற்ற சாதகமான நிலைகளில் உக்ரைன் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அவ்டீவ்கா நகரில் நமது படையினர் கெளரவத்துடன் சண்டையிட்டு தங்களால் முடிந்த அளவுக்கு ரஷிய படையினருக்கு இழப்பை ஏற்படுத்தினர் என ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
முன்னர் நடந்த ஆக்கிரமிப்பு
ஏற்கெனவே, ரஷ்ய படையினரால் முற்றுகையிடப்பட்டிருந்த பாக்முத் நகரைப் பாதுகாப்பதற்காக அங்கு தொடர்ந்து 9 மாதங்களாக வீரர்களை நிறுத்தி ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கி சண்டையிடச் செய்தார்.
உக்ரைன் போரில் மிக நீண்டதும், மிக அதிகமான எண்ணிக்கையில் உயிரிழப்புகளையும் அந்தச் சண்டை ஏற்படுத்தியது. எனினும், இறுதியில் பாக்முத் நகரை ரஷ்யாவிடம் உக்ரைன் இழந்தது.
இந்த விவகாரத்தால் ஒலெக்ஸாண்டர் சிர்ஸ்கியின் போர் உத்தி விமர்சனத்துக்குள்ளானது.
இந்தச் சூழலில், கடந்த 4 மாதங்களாக அவ்டீவ்கா நகரைக் கைப்பற்றுவதற்காக ரஷ்யப் படையினர் அந்த நகரைச் சுற்றிவளைத்துள்ளனர்.
நகரைப் பாதுகாப்பதற்காக நிறுத்தப்பட்டுள்ள உக்ரைன் வீரர்களைவிட அதிக எண்ணிக்கையில் அங்கு ரஷ்ய படையினர் குவிக்கப்பட்டனர்.
மீண்டும் போர் பதற்றம்
மேலும், நகரைப் பாதுகாப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் படையினருக்கு உணவு, ஆயுதங்கள் வருவதற்கான வழித்தடங்களையும் ரஷ்ய ராணுவம் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவ்டீவ்கா நகரம் வீழ்வது உறுதியான நிலையில் அங்கிருந்து வீரர்களை உக்ரைன் ராணுவம் திரும்ப அழைத்துள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி படையெடுத்து, டொனட்ஸ்க் உள்ளிட்ட கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பிராந்தியங்களில் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. இருந்தாலும், கடந்த சில மாதங்களாக போரில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், போர் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் அவ்டீவ்கா நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்துள்ளமை மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.