காசா போர்நிறுத்த ஒப்பந்தம்: வரவேற்கும் சர்வதேசம்
காசாவில் (Gaza) போர்நிறுத்தம் மற்றும் சிறைக்கைதிகள் விடுதலைக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதை ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயத்தை அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் எட்டப்பட்ட இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் மற்றும் அதற்கான முயற்சியில் அமெரிக்கா, கத்தார், எகிப்து மற்றும் துருக்கி நாடுகள் மேற்கொண்ட தூதரக முயற்சிகளையும் பாராட்டுகிறேன்.
விதிமுறை
ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளையும் பங்கேற்பாளர்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
அனைத்து சிறைக் கைதிகளும் மரியாதைக்குரிய முறையில் விடுவிக்கப்பட வேண்டும்.
நிரந்தர போர்நிறுத்தம் உறுதி செய்யப்பட வேண்டும், இப்போருக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
உதவிகள்
மனிதாபிமான உதவிகள் மற்றும் அத்தியாவசிய வணிகப் பொருட்கள் காசாவுக்குள் தடையின்றி உடனடியாக நுழைய அனுமதிக்கப்பட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தின் முழுமையான நடைமுறைக்கு ஆதரவு அளிக்கும்.
நிலையான மற்றும் நெறிமுறையுடன் கூடிய மனிதாபிமான உதவிகளை அதிகரிப்போம்.
மீள்நிர்மாணம்
அத்தோடு காசாவின் மீள்நிர்மாணம் மற்றும் மீட்சிக்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்.
இந்த அமைதி ஒப்பந்தம் இஸ்ரேலியரும் மற்றும் பலஸ்தீனரும் அமைதி மற்றும் பாதுகாப்புடன் இணைந்து வாழக்கூடிய இரு நாடு தீர்வுக்கான தொடக்கமாக அமைய வேண்டும்.
இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் அத்தோடு பலஸ்தீன மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, ஆக்கிரமிப்புக்கு முடிவுகொடுக்கக் கூடிய நம்பகமான அரசியல் பாதையை உருவாக்க அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
