ஜெனிவா நகல் தொடர்பில் இலங்கை பதில்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை கலந்துகொள்வதாகவும், இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையான சமூகம் ஏற்றுக்கொள்ளுமெனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (G. L. Peiris) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டினால் சமர்ப்பிக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை மார்ச் மாதம் 3 ஆம் திகதி விவாதிக்கப்படுமெனவும், இந்த அறிக்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து நாட்களுக்குள் இலங்கை பதில் அளிக்க வேண்டுமெனவும், உரிய பதில்கள் கவனமாக தொகுக்கப்பட்டு பெப்ரவரி 19 ஆம் திகதி ஜெனிவாவுக்கு அனுப்பப்படுமென்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
