செம்மணி மனிதப் புதை குழி விவகாரத்தில் ஐநாவின் தலையீடு! வலியுறுத்தும் கஜேந்திரகுமார்
செம்மணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிருசாந்தி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் சிறிலங்கா அரசை நம்பாத காரணத்தினால் 600 வரையானவர்கள் புதைக்கப்பட்டதாக சாட்சியம் வழங்கினார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை உள்ளக விசாரணையை எதிர்க்கிறோம் செம்மணி புதைகுழி விவகாரத்தை ஐநா பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்து இடம்பெற்ற மாபெரும் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “1999 ஆம் ஆண்டு பாடசாலை மாணவியான கிருசாந்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் செம்மணி பகுதியில் கடமையில் இருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் கொலை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார்.
இராணுவ கோப்ரலின் சாட்சியம்
அந்த இராணுவ கோப்ரல் இலங்கை அரசை நம்பாததன் காரணமாக இந்தப் பின்னணியில் இருந்தவர்களை வெளிப்படுத்துவதற்காக குறித்த பகுதியில் 600 வரையான உடல்கள் புதைக்கப்பட்டதாக சாட்சியம் வழங்கியிருக்கிறார்.

அவர் இந்த உண்மையை கூறாமல் விட்டிருக்கலாம் இருந்தும் செம்மணியில் பாரிய மனித படுகொலைகளின் பின்னால் இராணுவ உயர் அதிகாரிகள் இருந்ததன் காரணமாகவும் தன்னை காப்பாற்ற மாட்டார்கள் எனத் தெரிந்ததால் உண்மையை உலறிவிட்டார்.
அவர் அன்று கூறிய விடையங்கள் தற்போது உண்மையாகி சுமார் 600 வகையான எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட வருகின்றது./
தற்போது அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் செம்மணி பகுதியில் மயான கட்டுமானம் இடம்பெற்று வந்த நிலையில் அதனை மயானத்தில் எலும்பு கூடுகள் இருப்பது வழமையான விடயம் என சிலர் திசை திருப்ப பார்த்தார்கள்.
இருந்தாலும் நமது கட்சியை சேர்ந்த கிருபாகரன் என்னிடம் இந்தப் பகுதியில் மனித எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை முன்வைத்தார்.
யாழ்ப்பாண காவல்துறையினர் முறைப்பாட்டை ஏற்க மறுத்த நிலையில் சட்டத்தரணிகளான காண்டீபன் மற்றும் சுகாசின் ஒத்துழைப்புடன் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அகழ்வு பணிக்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.
செம்மணி மனித புதைதைக்குழி 600 ஐ நெருங்குகின்ற நிலையில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இன அழிப்பின் சாட்சியாக செம்மணி இடம் பிடித்துள்ளது.
சர்வதேச விசாரணையின் அவசியம்
ஐநா மனித உரிமைகள் பேரவை தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பில் சாட்சியங்கள் ஆதாரங்கள் வழங்கியும் சிறிலங்கா அரசு மீது நடவடிக்கை எடுக்க தயங்கி வருகிறது.

அந்த ஒரு சூழலில் தற்போது செம்மணி விவகாரம் என்பது பேசு பொருளாகவும் சர்வதேசத்தின் பார்வையை ஈர்த்துள்ள விடயமாகவும் பார்க்கக் கடியதாக உள்ளது.
2009 யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் தமக்கு விளக்கப்பட்ட மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர் குற்றங்கள் மற்றும் இன அழிப்புக்கு எதிராக உள்ளக விசாரணைகளை புறந்தள்ளி சர்வதேசத்திடம் நீதிக்காக போராட ஆரம்பித்தார்கள்.
இந்தப் போராட்டம் யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்தும் ஐநா மனித உரிமைகள் பேரவை சிறீலங்கா அரசு மீது தமிழ் மக்கள் சுமத்திய ஆதாரங்கள் சாட்சியங்கள் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறது.
பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் காத்திரமான கருத்துக்களை கூறி வந்தாலும் ஏனைய நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து போவதையே காண முடிகிறது.
முன்னாள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த இளவரசர் செயித் அல்ஹசன் தனது அறிக்கையில் தெளிவாகவும் இறுக்கமாகவும் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார்.
குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அரசு குற்றச்சாட்டுக்களை விசாரிப்பது என்பது உண்மையான நீதியை தராது என தனது அறிக்கையிலே தெளிவாக குறிப்பிட்டார்.
அவரது கருத்தை சர்வதேச சமூகம் உன்னிப்பாக நோக்க வேண்டும் ஏனெனில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள செம்மணி மனிதப் புதைகுழியின் ஆதாரங்கள் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை அரசிடம் இருப்பது ஆதாரங்களை அழிப்பதற்கு ஏதுவாக அமையும்.
அதன் காரணமாகவே தமிழ் மக்கள் உள்ளக விசாரணை நீதியை தராது செம்மணி மனிதப் புதை குழி விவகாரத்தை ஐநா பொறுப்பேற்க வேண்டும் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |