இலங்கையில் மனித உரிமை நிலைமை மோசம் - அம்பலப்படுத்திய ஐ.நாவின் அறிக்கை - சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சாட்டை
இலங்கையில் மனித உரிமை நிலவரம் அச்சம் தரும் விதத்தில் வீழ்ச்சியடைகின்றது என்பதையே இலங்கை குறித்த ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவிப்பதற்கு மாறானதாக மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை காணப்படுகின்றது எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான பணிப்பாளர் மீனாக்சி கங்குலி இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பெப்ரவரி 25ம் திகதி வெளியான அறிக்கை இன மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரான பாரபட்சங்களையும் பாதுகாப்பு படையினர் சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களை இலக்குவைத்தல் மற்றும் கடந்தகால துஸ்பிரயோகங்களிற்கான பொறுப்புக்கூறல் முடக்கப்பட்டுள்ளது என்பதையும் பதிவு செய்கின்றது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட் முன்வைத்துள்ள-இலங்கையில் மனித உரிமைமீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படுபவர்களிற்கு எதிரான தடைகள்,இலங்கையில் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களிற்காக சர்வதேச நீதியாணையின் கீழ் நீதியை வழங்குவதற்காக முயற்சித்தல், துன்புறுத்தலிற்கு உள்ளாக கூடிய இலங்கையர்களிற்கு புகலிடம் வழங்குதல், 2021ம் ஆண்டு ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவை தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஐக்கியநாடுகள் பொறுப்புக்கூறும் திட்டத்திற்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பரிந்துரைகளை ஐக்கியநாடுகளின் உறுப்புநாடுகள் நிறைவேற்றவேண்டும்.
ஐநா இலங்கை பாதுகாப்பு படைகளுடனான தனது ஈடுபாட்டின் போது மனித உரிமைகளின் தராதரங்களை பேணவேண்டும். இலங்கை அரசாங்கம் அதன் மனித உரிமை செயற்பாடுகள் குறித்த சர்வதேசசமூகத்தின் ஆய்விற்கு தவறான பிழையாக வழிநடத்தும் பிரசார நடவடிக்கைகள் மூலம் பதிலளித்துள்ளது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாப்பதுடன் சட்டத்தின் ஆட்சியை மீறும் அதேவேளை இலங்கைஅரசாங்கம் சிறுபான்மையினத்தவர்களையும் சிவில் சமூகத்தினரையும் தீவிரமாக இலக்குவைக்கின்றது என மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
அழுத்தங்களை தொடர்ந்துபேணுவதற்காக மனித உரிமை துஸ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களும் பலவீனமான நிலையில் உள்ள குழுக்களும் ஐக்கியநாட்டினையும் இலங்கையின் சகாக்களையும் நம்பியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்