சர்வதேசத்தை திசைதிருப்புவதா கோட்டாபயவின் நோக்கம்? விஜித்த ஹேரத் விடுத்துள்ள கோரிக்கை
நாட்டில் மீண்டுமொரு வன்முறை இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக அரவ தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டுமாயின் முதலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும்படி ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.
அதைவிடுத்து வழமைபோல சர்வதேசத்தை திசைதிருப்புவதற்காக வழங்கப்பட்ட உறுதிமொழியாகவே கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த அறிவிப்பும் மாறிவிடும் என்றும் அந்தக் கட்சி தெரிவிக்கின்றது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்து தொடர்பில் பதிலளித்தார்.
இதன்போது, சிறிலங்காவில் மீண்டுமொரு தீவிரவாத மற்றும் வன்முறைகள் இடம்பெற இடமளிக்கப்படாதென அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின்போது உறுதியளித்துள்ளார்.
எனினும் இந்த உறுதிமொழியை, அடை மழையினிடையே ஏற்படுகின்ற கடும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பைப் பெற வீட்டிலிருக்கின்ற பழைய இரும்புகளை வெளியே வீசிவிடுவது போன்ற சர்வதேசத்தைத் திருப்திபடுத்துகிற தற்காலிக அறிவிப்பாகவே பார்க்கின்றோம் என அவர் கூறியுள்ளார்.