இலங்கைக்கான தனிச் செயலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கையில் பின்னடைவு! தினேஷ் குணவர்தன தகவல்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இலங்கைக்கான தனிச் செயலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கை பின்னடைவைச் சந்தித்துள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,
2021 ஆண்டு மார்ச் மாதம் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை செயல்படுத்துவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவை குறித்த தனிச் செயலகத்தை அமைப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிய நிதித் தொகையில் 50 சதவீதத்திற்கும் குறைவான தொகையே மனித உரிமைகள் பேரவைக்கு கிடைத்துள்ளதாக நான் அறிந்துள்ளேன்.
அத்தோடு நியூயார்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதியின் முழு அறிக்கைக்காக காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் பேரவைத் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு நடப்பு ஆண்டிற்காக 2,856,300 அமெரிக்க டொலர் ஒதுக்கீட்டில் 13 உறுப்பினர்களைக் கொண்ட செயலகத்தை அமைக்க மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலெட் திட்டமிட்டிருந்தார்.
இந்தச் செயலகம் புலனாய்வாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்படவிருந்தது. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம் ஏற்கனவே இதற்கான விளம்பரத்தை செய்து புதிய பதவிகளுக்கு விண்ணப்பங்களையும் கோரி இருந்தது.
இந்த புதிய செயலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பெச்சலெட்டின் கீழ் செயல்பட இருந்தமை குறிப்படத்தக்கது.