இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் தொடர்பில் ஐ.நாவிற்கு சென்ற பரிந்துரை
வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் முடிவில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதன் மூலம் காணாமல்போனோரை தேடும் அலுவலகம் தனது ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை ஐக்கியநாடுகள் குழுவிற்கு சமர்ப்பித்துள்ள 22 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29 வது அமர்வு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபை தனது அறிக்கையை சமர்ப்பித்து மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளது.
சர்வதேச மன்னிப்புச்சபை தனது பரிந்துரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுங்கள்
சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதன் மூலம் பலவந்தமாக காணாமலாக்கப்படுதலில் தொடர்புடைய படையினர் மற்றும் பிறரிடம் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் காணாமல்போனோரை தேடுவதற்கான அதன் ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பிப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
மனித புதைகுழி அகழ்வுகள் தொடர்பில் மிகவும் அவசரமாக காணாமல்போனவர்கள் அலுவலகம் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை கேட்டுப்பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும்.
காணாமல்போனவர்களின் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்றுவதில் அந்த அலுவலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பிக்காதமைக்கு அதன் தலைமைத்துவத்தை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துங்கள்.அதன் நடவடிக்கைகள் குறித்து ஒழுங்கமைக்கப்பட்ட மாற்றங்களை மேற்கொள்ளுங்கள் அந்த அலுவகத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் திறமைசாலிகள் அர்ப்பணிப்புள்ளவர்கள் சுயாதீனமானவர்களாக விளங்குவதை உறுதி செய்யுங்கள்.
காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கோரிக்கை
பல தசாப்தங்களாக பதில்களைக் கோரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கோரிக்கைகளை அவசரமாகவும் உண்மையாகவும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காணாமல்போனவர்கள் எங்கிருக்கின்றார்கள்என்பதை தெளிவுபடுத்தாமல்,அவர்கள் உள்ள இடத்தை சுயாதீனமாக ஆராயாமல், காணாமல்போனமைக்கான சூழ்நிலைகளை தெரிவிக்காமல்,உயிருடன் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மனித எச்சங்களை அவர்களின் குடும்பத்தவர்களிடம் வழங்காமல் இது தொடர்பான விடயத்திற்கு அதிகாரிகள் முடிவை காணமுயலக்கூடாது.
பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நீதி மற்றும் இழப்பீட்டிற்கான உரிமைகளிற்கு அதிகாரிகள் முன்னுரிமை வழங்கவேண்டும்,அவற்றை மதிக்கவேண்டும்,அதற்கு உதவவேண்டும்.
நிறுவனத்திற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே நிலவும் நம்பிக்கை மற்றும் அறிவு இடைவெளியைக் குறைக்க இன்னும் பல தொலைநோக்குப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமர்வில் ஐநாவின் குழு பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் இலங்கை தனது கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றியுள்து என்பது குறித்து ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
