இலங்கை மனித புதைகுழிகள் : சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் ஐ.நா
இலங்கையில் அண்மையகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் மற்றும் குழந்தைகள் உட்பட்டவர்களின் தனிப்பட்ட உடைமைகள் என்பன கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான அவசரத் தேவையையும் தெளிவாக வலியுறுத்துவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பலவந்தமாக காணாமல் போன இலங்கையர்களின் கதி
சர்வதேச காணாமல் போனோர் தினமான இன்று, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி, நாடு முழுவதும், பலவந்தமாக காணாமல் போன ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
இந்தநிலையில் மௌனம் செயலற்ற தன்மை மற்றும் தண்டனையின்மையால் இது திறந்த ஒரு தேசிய காயமாகியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். அன்புக்குரியவரைப் பற்றிய பதில்கள் இல்லாமல் விடப்படுவது காலத்தால் மட்டுமே குணப்படுத்த முடியாத ஒரு அதிர்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
உண்மை மற்றும் நீதி இல்லாததால், இது ஆழமடையும் ஒரு துன்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச காணாமல் போனோர் தினம் அனைத்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நினைவை மதிக்கும் ஒரு நாளாகும். இந்தநிலையில், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இந்த மீறலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளவோ மன்னிக்கவோ அல்லது மறக்கவோ கூடாது என்பதை இந்த நாள் நினைவூட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதற்கு வழி வகுக்கும்
இதேவேளை உண்மைகளை வெளிக்கொணர்வது காணாமல் போனோரை தேடும் குடும்பங்களுக்கு ஒரு நெருக்கமான சூழலை ஏற்படுத்த உதவும். அத்துடன், அது நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ஒரு முன்நிபந்தனையாகவும் இருக்கும். அதேநேரம் தேசம் நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதற்கு வழி வகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
நீதி, உண்மை மற்றும் இழப்பீடுகள், நல்லிணக்க நிறுவனங்கள் மீதான நம்பிக்கை என்பன இலங்கையர்கள் நீண்டகாலமாகத் தேடிய நிலையான அமைதிக்கான பிரிக்க முடியாத அடித்தளங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில்,வலுக்கட்டாயமாக காணாமல் போன அனைவரையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டை அங்கீகரிப்பது மற்றும் காணாமல் போனவர்கள் மீதான அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றை நிறுவுவது உட்பட இந்த வேதனையான மரபை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதில்
இதன் அடிப்படையில், நீதியை வழங்க இந்த அமைப்புகளுக்கு தேவையான வளங்கள், தடயவியல் மற்றும் தடயங்களை கண்டறியும் திறன் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று ஃபிரான்ச் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதில்களை வழங்க இலங்கை தமது முழு சட்ட அதிகாரங்களையும் பயன்படுத்தி தடயங்கள் மற்றும் விசாரணைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களை அழைப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும் எனினும் இன்னும் பல செயற்பாடுகள் நிறைவேற்றப்படவேண்டியுள்ளன என்றும் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் எதிர்கொள்ளும் கண்காணிப்பு அச்சுறுத்தல்கள் மிரட்டல் மற்றும் பழிவாங்கல்கள் குறித்தும் தாம் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புக்குரியவர்களைத் தேடும் குடும்பத்துடன் துணை நிற்போம்
தங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள அனைவரும் தண்டிக்கப்படக்கூடாது. பதிலாக அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் வலியுறுத்தியுள்ளார். இந்த நாளிலும் ஒவ்வொரு நாளிலும்,தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் ஒவ்வொரு குடும்பத்துடனும் ஐக்கிய நாடுகள் சபை ஒற்றுமையுடன் நிற்கிறது.
அத்துடன்,பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீண்டும் நிகழாததற்கான உத்தரவாதங்களை உறுதி செய்வதற்காக, வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த நம்பகமான சுயாதீனமான விசாரணைகளை நடத்தப்படவேண்டும் என்பதில்;, ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும், ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

