பூஸ்ஸ சிறையில் தீவிரமடையும் பாதாள நடவடிக்கைகள்!
கையடக்கத் தொலைபேசி பயன்பாடு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ள பெரும்பாலான அதிகாரிகளிடமிருந்து எந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை என காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
எனினும், இந்த உயர் பாதுகாப்பு சிறையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் எனவும், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு அவற்றிலிருந்து எந்த நிவாரணமும் கிடைக்காது எனவும் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கையடக்கத் தொலைபேசிகளை முடக்கும் ஜாமர்கள் பூஸ்ஸ சிறைச்சாலையில் செயல்படவில்லை எனவும், கடந்த காலங்களில் அவற்றை மீள இயக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசேட சோதனை
பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (27.12.2025) நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, பாதாள உலகத் தலைவர்களான லொக்கு பெட்டி, தெமட்டகொட சமிந்த, மிதிகம ருவான் மற்றும் வெலே சுதா ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த அறைகளிலிருந்து 15 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.

பாதாள உலகக் குழு தலைவர் லொக்கு பெட்டியின் அறையின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கையடக்கத் தொலைபேசிகளும், தெமட்டகொட சமிந்தவின் அறையின் கூரையில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகத் தலைவர்கள் பணத்திற்காகவோ அல்லது அந்த அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பதன் மூலமாகவோ அங்கு பணிபுரியும் சில அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவளிக்காத அவர்களது குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்திய பின்னர், அந்த அதிகாரிகள் பெரும்பாலும் பாதாள உலகத் தலைவர்களுக்கு ஆதரவளிக்க முன்வருகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |