சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீதுஅடையாளம் தெரியாதோர் தாக்குதல்
சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் (Samuthitha Samarawickrema) வீட்டின் மீது, அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் இன்று (14) அதிகாலை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ளது.
பிலியந்தலை கெம்பீரிஜ் கோர்ட் வீட்டுத் திட்டத்திலுள்ள சமுதித்தவின் வீட்டின் மீது, நான்கு பேரை கொண்ட அடையாளம் தெரியாத குழுவினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெள்ளை வானில் வந்த குழுவினர், குடியிருப்பின் பிரதான நுழைவாயிலை பலவந்தமாக திறந்து, அங்கிருந்தா பாதுகாப்பு உத்தியோகத்தரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதாக சமுதித்த சமரவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, துப்பாக்கி பிரயோக சத்தங்களை கேட்கக்கூடியதாக இருந்ததாக சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிலியந்தலை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹிரு தொலைக்காட்சியின் 'பத்தரே விஸ்தரே' என்ற பத்திரிகை விவரண நிகழ்ச்சி மற்றும் 'சலகுண' என்ற அரசியல் உரையாடல் நிகழ்ச்சிகளை சமுதித்த நெறியாள்கை செய்து வருவதுடன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளை நோக்கி நேரடியாக கேள்விக்கணைகளை தொடுக்கும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அவர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.