ஏவுகணை வீசும் அதிதிறன் கொண்ட நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களின் தளபதிகளுக்கு கடிதங்கள் எழுதவுள்ள ரிசி சுனக்!
பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றுள்ள ரிசி சுனக்கின் முதல் வேலை, பிரித்தானியாவுக்கு அணு ஆயுத தாக்குதல் மூலம் ஆபத்து வரும் பட்சத்தில், அதை எதிர்கோள்வதற்காக என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பிரித்தானியாவுக்குச் சொந்தமான ஏவுகணை வீசும் திறன் கொண்ட நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களின் தளபதிகளுக்கு கடிதங்கள் எழுதுவதாகும்.
ஒவ்வொரு முறையும் பிரித்தானியாவுக்கு புதிதாக ஒருவர் பிரதமராக பொறுப்பேற்கும் போதும், ஏற்கனவே எழுதப்பட்ட கடிதங்கள் அழிக்கப்பட்டு, புதிய பிரதமரால் புதிய கடிதங்கள் எழுதப்படும்.
நாட்டின் பலத்தை காட்டுவதே ஒரே நோக்கம்
தெரஸா மே பிரதமராக இருக்கும்போது, 100,000 அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை அழிக்கக்கூடிய அணு ஆயுத தாக்குதலை நீங்கள் உத்தரவிடுவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு அவர் பதிலளிக்கையில், ஆம், உத்தரவிடுவேன், நாம் அணு ஆயுதம் பிரயோகிப்போம் என்பதை நமது எதிரிகள் அறிந்துகொள்ளவேண்டும் என்பது தான் அதன் ஒரே நோக்கம் என்று வேதனையுடன் பதிலளித்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இப்போதைக்கு பிரித்தானியாவில் முக்கிய பிரச்சினையாக பொருளாதாரம் தான் உள்ளது. ஆகவே, ரிசி சுனக் பிரதமராக பதவியேற்றதும் அவருடைய முதல் வேலை பொருளாதாரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுப்பது தொடர்பானதாகத்தான் இருக்கும் எனப் பலரும் நினைத்திருந்தனர்.
உக்ரைன் அதிபரின் சூளுரையே உதாரணம்
ஆனால், பிரதமராக ரிசி சுனக்கின் முதல் வேலை அது அல்ல, பிரித்தானியாவின் பாதுகாப்பு குறித்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையிலேயே ஏவுகணை வீசும் திறன் கொண்ட நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களின் தளபதிகளுக்கு அவர் கடிதங்கள் எழுதுவது முக்கியமான விடயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலன்கி, தங்கள் நாட்டின் இருப்புக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில், அணு ஆயுதம் பிரயோகித்தாவது தங்கள் நாட்டைக் காப்போம் என கூறியிருந்தார்.
உண்மையில், எல்லா நாடுகளுமே தங்கள் பாதுகாப்புக்குத்தான் அவ்வளவு முன்னுரிமை கொடுக்கின்றன, கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
