ஜெனிவா தீர்மானம் தொடர்பில் தாயகம் மற்றும் தென்னிலங்கை நாளிதழ்களின் பிரதிபலிப்பு!
ஜெனீவாவில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானம் தொடர்பாக தென்னிலங்கையில் வெளியாகும் சிங்கள நாளிதழ்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் தாயகத்திலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் ஜெனிவா விவகாரத்திற்கு முன்னுரிமை வழங்கியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்காவின் பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்க விவகாரத்தை வலியுறுத்தி பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, கொண்டுவந்த புதிய தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த தீர்மானம் 11 மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் தென்னிலங்கையில் இன்றைய தினம் வெளியாகிய சிங்கள மொழிமூலப் பத்திரிகையில் ஒரேயொரு பத்திரிகையே வாக்கெடுப்பில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறிய செய்தியை முக்கிய செய்தியாகப் பிரசுரித்திருக்கின்றது.
அதிலும் தென்னிலங்கையில், அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் லங்காதீப பத்திரிகை இந்த செய்தியினை சாதாரண கட்டமிடப்பட்ட செய்தியாக வலப்பக்க மூலையில் பிரசுரித்திருக்கின்றது.
திவயின பத்திரிகையில் பிரதான செய்தியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட செய்தியும், வாக்கெடுப்பில் ஸ்ரீலங்காவுக்கு ஆதரவாக, எதிராக மற்றும் கலந்துகொள்ளாத நாடுகளின் எண்ணிக்கையும் சேர்த்து செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மவ்பிம சிங்களப் பத்திரிகையில், 25 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாதிருந்தமை ஸ்ரீலங்காவுக்குக் கிடைத்த வெற்றியென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்த கருத்து பிரதான செய்தியாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
மேலும் பிரசித்தமான டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகையில், இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாதிருந்தமை பற்றிய செய்தி முக்கிய செய்தியாக காட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.