கடும் விளைவுகள் ஏற்படும் -ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க முயற்சி செய்தால் அதிக உயிரிழப்புகள் மற்றும் கடும் விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க பாதுகாப்பு செயலர் எச்சரித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் பதற்றம் அதிகரித்தபடியே இருந்து வருகிறது. உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேருவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைன் எல்லையில் ரஷ்யா பெரும் அளவில் தனது படைகளை குவித்துள்ளது. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் படை எடுக்கலாம் என்ற பதற்றம் நீடித்து வருகிறது.
உக்ரைன் மீது படை எடுத்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஜோபைடன் பயங்கரமான எச்சரிக்கைகளை விடுத்தார். உக்ரைனை தாக்கினால் அந்நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் களம் இறங்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உள்ளன.
எல்லையில் உக்ரைன்-ரஷ்ய இராணுவத்தினர் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே போர் பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ரஷ்ய அதிபர் புடினிடம் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பேசினார். அப்போது போரை தவிர்ப்பது பற்றி எடுத்துரைத்தார்.
இது குறித்து ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்வ்லாவ் ரோவ்கூறும் போது, ‘போரை ரஷ்யா விரும்பவில்லை. அதே வேளையில் நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளமுடியாது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் போரை தவிர்ப்பது புடின் கையில் தான் உள்ளது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஒஸ்டின் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:- ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுக்கு எதிராக படைகளை பயன்படுத்துவதற்கான இறுதி முடிவை எடுப்பார் என்று நாங்கள் நம்பவில்லை. என்றாலும் இப்போது அவரிடம் தான் அந்த முடிவு இருக்கிறது. போரை தவிர்ப்பது பற்றி அவர் தான் முடிவு செய்ய வேண்டும். உக்ரைன் நகரங்கள் மற்றும் குறிப்பிட்டதக்க பகுதிகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் ரஷ்யா தனது ஒரு லட்சம் இராணுவ வீரர்களை பயன்படுத்தலாம். ரஷ்யா அளிக்கும் தவறான தகவல்களில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அவர்கள் எங்களை முட்டாள் ஆக்க முடியாது’ என்றார்.
மேலும் ராணுவ ஜெனரல் மார்க் மில்லே கூறும்போது, ‘உக்ரைனை சுற்றி ரஷ்ய தரைப்படை, கடற்படை, விமானப்படை மட்டுமல்ல சைபர் மற்றும் மின்னணு போர் திறன்கள், சிறப்பு நடவடிக்கை படைகளும் உள்ளன.
உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க முயற்சி செய்தால் அதிக உயிரிழப்புகள் மற்றும் கடும் விளைவுகள் ஏற்படும்’ என்றார்.
