ஆர்ப்பாட்டத்தில் குதித்த மின்சார சபை தொழிற்சங்கங்கள்: மக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு
மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (18) மின்சார சபையின் கொழும்பு (Colombo) தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது.
போக்குவரத்து நெரிசல்
இதன் காரணமாக, தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, கொம்பனித் தெருவில் இருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியின் ஒரு மருங்கில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் எற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் நிலை காரணமாக பொதுமக்கள் தமது அதிருப்திகளை வெளியிட்டுள்ளனர்.
போராட்டம்
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வாகன சாரதி ஒருவர் “சிறந்த கொடுப்பனவு மற்றும் சம்பளம் வழங்கப்படும் மின்சார சபை ஊழியர்களின் நடத்தை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
புதிய அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ள போதிலும் அதனை பயன்னடுத்தி சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இல்லாவிட்டால் இவ்வாறு போராட்டம் செய்பவர்களை காவல்துறையினரை பயன்படுத்தி கட்டுப்படுத்தவேண்டும்.
அன்றாட வேலை
அன்றாட வேலைகளுக்கு செல்லும் பலர் தற்போது இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தயவு செய்து இவர்களுக்கான ஒரு முடிவை வழங்குங்கள் இல்லை என்றால் இவர்களை வெயியேற்றுங்கள், இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களே அவர்களை விரட்டியடிக்க நேரிடும்.
மின்சார சபை ஊழியர்கள் மாத்திரம் நாட்டில் உழைக்கும்வர்க்கத்தினரல்ல” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
