Northern Uniக்கு வருகை தந்த பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா! கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம்
யாழ்ப்பாண மாணவர்களுக்குப் புதிய சர்வதேச உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், பிரித்தானியாவின் புகழ்பெற்ற லெஸ்டர் பல்கலைக்கழகமும் (University of Leicester), NORTHERN UNI நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
இதற்கமைய, லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, நேற்று (23) யாழ்ப்பாணத்திலுள்ள NORTHERN UNIக்கு நேரில் விஜயம் செய்து குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய கணினி அறிவியல் பொறியியல் பட்டப்படிப்பு (BEng Computer Science with Artificial Intelligence) மற்றும் வணிகம் மற்றும் முகாமைத்துவ இளங்கலைப் பட்டப்படிப்பு (BBA in Business and Management) உள்ளிட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கற்கை நெறிகளை வழங்க இரு நிறுவனங்களும் இணைந்து செயற்படவுள்ளன.
சர்வதேச தரத்திலான உயர்கல்வி
இதன் மூலம் யாழ்ப்பாண மாணவர்கள் தமது சொந்த மண்ணிலிருந்தே சர்வதேச தரத்திலான உயர்கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான புதிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

மேலும், எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் விண்வெளி அறிவியல் துறையில் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் இரு கல்வி நிறுவனங்களும் ஆராய்ந்து வருகின்றன.
இதேவேளை பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜாவின் இவ்விஜயமானது, நிறுவனத்தின் கல்விசார் மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் உலகத் தரத்திலான கல்வித் திட்டங்களை முன்னெடுத்தல் ஆகியவற்றுக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்வதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
SLIIT Northern Uniயின் கல்விசார் மேன்மை, சர்வதேச அங்கீகாரம் மற்றும் நிறுவன ஆற்றலை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு பெறுமதிமிக்க சந்தர்ப்பமாக இவ்விஜயம் அமைந்துள்ளது.
இதன் மூலம் உருவாகும் புதிய கல்விசார் கூட்டாண்மைகளும் ஒத்துழைப்புகளும் வட இலங்கையின் உயர்கல்வி வளர்ச்சிக்கும், எதிர்காலத் தலைமுறையினரின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் நீண்டகாலப் பயன்களை வழங்கும் என SLIIT Northern Uni எதிர்பார்க்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |