இலங்கையின் கறைபடாத சாதனைக்கு முற்றுப்புள்ளி?
நிலுவையில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட சாதாரண வெளிநாட்டுக் கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கு வருந்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கடனை திருப்பிச் செலுத்தாமை மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சுதந்திரத்தின் பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதில் கறைபடாத சாதனையை இலங்கை பேணி வருவதாகவும் அந்தக் கட்சி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
