ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு கட்சியின் தலைவர் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (21) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதேவேளை குறித்த மாநாட்டில் கட்சிக்கான புதிய அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு வங்குரோத்து நிலை ஏற்பட்டதன் பின்னரான இந்த மாநாடு முழு நாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அதிபரின் சீன விஜயம்
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
” முழு உலகத்தின் ஆதரவுடன் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர அதிபர் முயற்சி செய்வார்.
சீன விஜயத்தின் பின்னர் முதல் தடவையாக அதிபர் மக்கள் மத்தியில் உரையாற்றி நாட்டுக்கு முக்கிய செய்தியொன்றை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து ஆசியாவின் பலம் வாய்ந்த நாடாக இலங்கையை உருவாக்க வழி காட்டியுள்ளார்.
மாநாட்டில் பங்கேற்குமாறு
புதிய தொழில்நுட்பத்துடன் தேசிய மற்றும் பொருளாதார சுதந்திரத்தை அடைவதற்கு முழு நாட்டினதும் ஆதரவைப் பெறக்கூடிய கட்சி அமைப்பை அவர் அறிமுகப்படுத்தவுள்ளார். நாமும் அந்த பாதையில் பயணிக்க வேண்டும்.”
மேலும், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன், கட்சியின் அரசியலமைப்பை அங்கீகரிக்கக் கூடியவர்கள் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.